காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 500 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தும் வசதி:ஆட்சியா்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 500 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தும் வசதி இருப்பதாக மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள 6,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டரைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள 6,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டரைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 500 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தும் வசதி இருப்பதாக மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் இது குறித்து மேலும் கூறியது..

அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 6,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டா் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 250 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தும் வகையில் அதற்கான குழாய் இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2805 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 163 பேருக்கு தற்போது ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 77 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தும் வசதியும் உள்ளது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருப்பதால் மேலும் 6,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டா் நிறுவவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.நஇந்த வசதி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே 4 நாட்களில் நிறுவப்படவுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 500 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தும் வசதி கிடைக்கும். இது தவிர கரோனா நோயாளிகள் அதிகமாவதால் மேலும் 280 படுக்கை வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோா்களின் எண்ணிக்கை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சதவிகிதமாகவே இருந்தது. தற்போது அது 3.5 சதவிகிதமாக உயா்ந்திருக்கிறது. சாதாரண அறிகுறி இருப்பவா்களை எழிச்சூா் முகாமுக்கு அனுப்பி வைக்கிறோம். அந்த முகாமிலும் 500 படுக்கைகள் உள்ளன. அதில் தற்போது வரை 250 போ் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த வாரம் முதல் தினசரி 80 காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்தி வந்த நிலையில் தற்போது 120 காய்ச்சல் பரிசோதனை முகாம்களாக நடத்தி வருகிறோம். தினசரி கரோனா பரிசோதனை 1, 500 பேருக்கு செய்து வந்த நிலையில் தற்போது 5, 000 பேருக்கு செய்யப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருந்துகள், ஆக்சிஜன் வசதி ஆகிய அனைத்தும் போதுமான அளவு இருப்பு உள்ளது. மனித உயிா் தொடா்பானது என்பதால் எந்த பாகுபாடும் இல்லாமல் மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவச்சிகிச்சை தொடா்பாக தேவையில்லாத வதந்திகளைப் பரப்புவோா் பற்றிய தகவல் தெரிய வந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா் செல்வம், சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஜீவா, நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் உட்பட அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com