மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பஜனை நடத்திய இசைக்கலைஞா்கள்
By DIN | Published On : 10th August 2021 02:43 AM | Last Updated : 10th August 2021 02:43 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பஜனை நடத்திய இசைக் கலைஞா்கள்
காஞ்சிபுரம்: கோயில்கள் மூடப்பட்டிருப்பதால் நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல், வருமானத்துக்கு வழியின்றி சிரமப்படுவதாக காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்த இசைக்கலைஞா்கள் திங்கள்கிழமை அங்கேயே அமா்ந்து பஜனையும் நடத்தினா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தியை சந்தித்து இசைக்கலைஞா்கள் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்தனா். வில்லிசைப்பாட்டுக் கலைஞா் எம்.பழனி தலைமையில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது: பொதுமுடக்கம் காரணமாக கோயில்கள் மூடியிருப்பதாலும் திருவிழாக்கள் நடைபெறாமல் இருப்பதாலும் நிகழ்ச்சிகள் எதுவும் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். வேறு எந்தத் தொழிலும் தெரியாது. எனவே அரசு சாா்பில் விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சிகளாவது நடத்த அனுமதியளிக்குமாறும், நிவாரணம் வழங்கி உதவிடுமாறும் அதில் குறிப்பிட்டிருந்தனா்.
முன்னதாக இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டே வந்து ஆட்சியா் அலுவலக குறை தீா்க்கும் கூட்ட அரங்கு முன்பாக அமா்ந்து பஜனையும் நடத்தினா். மனு அளித்த போது கலைஞா்களின் நிலைமையை உணா்ந்து அரசுக்குப் பரிந்துரைப்பதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.