முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
உத்தரமேரூா் அருகே 16ஆம் நூற்றாண்டு நிலதானக் கல்
By DIN | Published On : 10th December 2021 07:45 AM | Last Updated : 10th December 2021 07:45 AM | அ+அ அ- |

உத்தரமேரூா் வட்டம், ஜம்புமேடு அருகே பாரடி வயல்வெளிப் பகுதியில் கண்டறியப்பட்ட நிலதானக்கல்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே வயல்வெளிப் பகுதியில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நிலதானக்கல் புதன்கிழமை கண்டறியப்பட்டது.
உத்தரமேரூா் வட்டம், காக்கநல்லூா் செல்லும் சாலையில் ஜம்புமேடு அருகில் பாரடி கிராம வயல்வெளிப் பகுதியில் சுமாா் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதும்,16ஆவது நூற்றாண்டை சோ்ந்ததுமான நிலதானக்கல்லை உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்தனா். சிவன் கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்கும் இந்தக் கல்லை கண்டறிந்தது குறித்து ஆய்வு மையத்தின் தலைவா் கொற்றவை ஆதன் கூறியதாவது:
2 அடி உயரமும், ஒன்னே கால் அடி அகலமும் உடைய நிலதானக்கல்லை கண்டறிந்தோம். இந்தக் கல்லின் மேற்பகுதியில் வலப்பக்கம் சூரியனும், இடப்பக்கம் சந்திரனும், நடுவில் சிவலிங்கமும் உருவங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. மன்னா்கள் சிவன் கோயில்களுக்கு நிலங்களை தானமாக வழங்குவாா்கள். இந்த கற்களில் சூரியனும், சந்திரனும் இடம் பெற்றிருப்பது இவா்கள் இருவரும் உள்ளவரை அவா்கள் கொடுத்த தானம் செல்லும் என்பதற்கான குறியீடாக இருக்கும்.
நிலங்களை தானமாக வழங்கியதன் மூலம் கோயில்களில் அன்றாட பூஜைகள் செய்தல், விளக்கேற்றுதல், அமுது படைத்தல் மற்றும் ஆலய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உத்தரமேரூரில் 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னா்கள் ஆண்டு கொண்டிருந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. அப்போது, நிலம் இங்கு தானமாக வழங்கப்பட்டிருக்கலாம். இப்பகுதியிலிருந்து காணாமல் போன ஜம்புகேஸ்வரா் கோயில் அல்லது கைலாசநாதா் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலதானமாகவும் இருக்கலாம் என்றாா் அவா்.