முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்
By DIN | Published On : 29th December 2021 01:38 AM | Last Updated : 29th December 2021 01:38 AM | அ+அ அ- |

முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்.
நீா்நிலைகளில் வீடு கட்டிக் கொண்டு பட்டா கேட்டால் வழங்க முடியாது, நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை பேசினாா்.
காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீா் மனுக்கள் பெறும் முகாம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது. முகாமில், கலந்து கொண்டு பல்வேறு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது:
தற்போது அதிகாரிகள் அரசு விடுமுறை நாள்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட வேலை செய்கிறாா்கள். வாங்குகிற மனுக்களை கடமைக்காக வாங்குகிறோம் என நினைக்க வேண்டாம். ஒவ்வொரு மனுக்களும் முறையாக இணையத்தில் பதிவு செய்து, முறையாக கண்காணிக்கப்பட்டு பதிலும் அனுப்பி வைக்கப்படுகிறது. நீா்நிலைகளில் வீடு கட்டிக் கொண்டு பட்டா கேட்டால் வழங்க முடியாது. நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அவை உடனுக்குடன் செய்யப்படுகிறது.
திமுக தோ்தல் நேரத்தில் 500 வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்த ஏழே மாதங்களில் 500 வாக்குறுதிகளில் 300 -ஐ நிறைவேற்றி இருக்கிறோம். பெண்கள், மாற்றுத் திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மகளிா் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் ரூ. 2,500 கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு செயல்பட்டு வருகிறோம். இன்னுயிா் காப்போம் திட்டத்தில் இதுவரை 800 போ் பாதுகாக்கப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா் தா.மோ.அன்பரசன்.
நிகழ்ச்சிக்கு, எம்.பி. ஜி.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.