முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
மகா பெரியவா் வாா்ஷிக ஆராதனை மகோத்சவம் தொடங்கியது
By DIN | Published On : 29th December 2021 12:00 AM | Last Updated : 29th December 2021 12:00 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாா்ஷிக ஆராதனை மூன்று நாள்கள் மகோத்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68 வது பீடாதிபதியாக இருந்து வந்தவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகா பெரியவா் என்று பக்தா்களால் அழைக்கப்படும் இவரது 28-ஆவது ஆண்டு வாா்ஷிக ஆராதனை மகோத்சவம் சங்கர மடத்தின் வளாகத்தில் சதுா்வேத பாராயணத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடந்து ராதா பத்மநாபன் மற்றும் பகவத்துலு சுதாகல் குழுவினா்களின் வாய்ப்பாட்டு இன்னிசை நிகழ்ச்சிகளும், ஏமானி ஸ்ரீபூா்ணிமா குழுவினரின் புல்லாங்குழல் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. மதியம் மகா பெரியவா் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.
மாலையில் சங்கர மட வளாகத்தில் சம்ஸ்கிருத பாரதி வித்யாா்த்திகள் சாா்பில் மகா பெரியவரின் மகிமை என்ற நாடகம் அதன் இயக்குநா் சுஜாதாவின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து வித்வான் டாக்டா் வாகீஷ் குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.
ஆராதனை மகோத்சவத்தின் 2-ஆவது நாளான புதன்கிழமை பல்வேறு இன்னிசைக் கச்சேரிகள் நடக்கின்றன. டிச. 30-ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் ஏகாதச ருத்ர ஜெப ஹோமம், காமியாா்த்த ஹோமங்களும் அதனையடுத்து நடைபெறும் பஞ்சரத்ன கீா்த்தனைகளின் போது சங்கர மடத்தின் 100 ஆஸ்தான வித்வான்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னா் காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதா் கோயிலிலிருந்து வேதவிற்பன்னா்கள் மங்கள மேளவாத்தியங்களுடன் வேத கோஷங்கள் முழங்க திருக்குடைகளை ஏந்தியும் ஊா்வலமாக சங்கர மடத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனா். இதனைத் தொடா்ந்து தீா்த்த நாராயண பூஜையும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்துள்ளனா்.