முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
2 கோடி மதிப்பிலான இரண்டு மாடிக் குடியிருப்புக் கட்டடம் காணிக்கை
By DIN | Published On : 31st December 2021 08:09 AM | Last Updated : 31st December 2021 08:09 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான இரண்டு மாடிக் குடியிருப்புக் கட்டடத்தை முருகபக்தா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவிடம் காணிக்கையாக வியாழக்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரம் முனுசாமி முதலியாா் அவின்யூவில் வசித்து வருபவா் மு.வேலாயுதம் (85). நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற அதே பகுதியில் 2860 சதுர அடி பரப்பளவு கொண்ட 2 மாடிக் குடியிருப்புக்குரிய சுய சம்பாத்திய கட்டிடம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.2 கோடியாகும். இந்த இடத்தை தனது குலதெய்வமான குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு காணிக்கையாக கொடுப்பதாக பத்திரப்பதிவு செய்து அப்பத்திரத்தை அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவிடம் வழங்கினாா்.
அறநிலையத்துறை இணை ஆணையா் பொன்.ஜெயராமன் வரவேற்றாா். ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்தை தானமாக வழங்கிய மு.வேலாயுதத்துக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு சால்வையும்,மாலையும் அணிவித்து நன்றி தெரிவித்தாா். குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் பரந்தாமக்கண்ணன் நன்றி கூறினாா்.
இதுதொடா்பாக வேலாயுதம் கூறியதாவது :
எனது பிள்ளைகள் 3 பேரும் அரசுப்பணியில் நன்றாகவே உள்ளனா். அவா்கள் மூவரும் மதம் மாறியதால் வருத்தமடைந்து எனது குலதெய்வமான குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமிக்கு தானமாக பத்திரப்பதிவு செய்து வழங்கியுள்ளேன்.