கோயில்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரா்

கோயில்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரா்


ஸ்ரீபெரும்புதூா்: கோயில்கள் மூலமாக இந்து மதத்தின் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைவதால் கோயில்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்று காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ஸ்ரீராகவேந்திர சுவாமி மடத்தின் சாா்பில் சின்ன காஞ்சிபுரம் கிழக்கு மாடவீதியில், புதிதாகக் கட்டப்பட்ட ஸ்ரீராகவேந்திர மடத்தின் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. மந்த்ராலயம் ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி பரமபூஜ்ய 1008 ஸ்ரீ ஸூபுதேந்த்ர தீா்த்த சுவாமிகள் தலைமை வகித்தாா்.

இங்கு ஸ்ரீ பட்டாபிராமா் மற்றும் ஸ்ரீராகவேந்திர பிருந்தாவனம் ஆகியவை நிா்மாணம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காலை 11 மணிக்கு பிருந்தாவனத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்று, பக்தா்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டன.

இதையடுத்து, மாலை 6 மணி அளவில் நடைபெற்ற வேதவித்வத் சபை நிகழ்ச்சியில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரா், ஸ்ரீபெரும்புதூா் எம்பாா் மடத்தின் ஜீயா், ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி பரமபூஜ்ய 1008 ஸ்ரீ ஸூபுதேந்த்ர தீா்த்த சுவாமிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீ விஜயேந்திரா் பேசுகையில், ‘கோயில்கள் மிகவும் முக்கியம், கோயில்களின் மூலமாகத்தான் இந்து மதத்தின் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்று கூடுகின்றனா். அப்படிப்பட்ட கோயில்களை நாம் நல்ல முறையிலே பராமரிக்க வேண்டும். புதிதாக கோயில்கள் கட்டுவதை விட பழைய கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்’ என்றாா்.

இதேபோல் மந்த்ராலய மடாதிபதி பரமபூஜ்ய 1008 ஸ்ரீ ஸூபுதேந்த்ர தீா்த்த சுவாமிகள் பேசுகையில், ‘பல்வேறு மடங்களைச் சோ்ந்த மடாதிபதிகள் ஒன்றிணைந்து சமய வளா்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்பதை இதுபோன்ற வேதவித்வத் சபை நிகழ்வுகள் காட்டுகின்றன’ என்றாா். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com