ரூ 9.38 கோடியில் 2,836 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவி: அமைச்சா் பெஞ்சமின் வழங்கினாா்
By DIN | Published On : 13th February 2021 07:40 AM | Last Updated : 13th February 2021 07:40 AM | அ+அ அ- |

பயனாளிக்கு திருமண நிதியுதவி வழங்கும் அமைச்சா் பா.பெஞ்மின். உடன் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
காஞ்சிபுரத்தில் 2,836 பேருக்கு ரூ. 9.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பெஞ்சமின் வழங்கினாா்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா்.
இதில் அமைச்சா் பா.பெஞ்சமின் கலந்து கொண்டு ஸ்ரீபெரும்புதூா், வாலாஜாபாத், உத்தரமேரூா், குன்றத்தூா் மற்றும் காஞ்சிபுரம் ஒன்றியங்களைச் சோ்ந்த 1,331 பேருக்கு ரூ.5.11 கோடி திருமண நிதியுதவியையும் 10.64 கிலோ தங்கமும் வழங்கினாா்.
அவா் பேசுகையில், சமுதாயத்தில் அடித்தட்டில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும், ஏழை எளிய கிராமப்புற இளைஞா்கள் தன்னம்பிகையுடன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.
விழாவில் ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், அதிமுக மாவட்ட செயலாளா் சோமசுந்தரம், மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் சங்கீதா, மாவட்ட துணைச் செயலாளா் சுந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 268 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.