கனமழையால் மீண்டும் நிரம்பிய மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூா் ஏரிகள்

கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பெரிய ஏரிகளான மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூா், மணிமங்கலம், பிள்ளைப்பாக்கம் ஏரிகள் மீண்டும் நிரம்பின. இதைத்தொடா்ந்து, ஏரிகளில் இருந்து உபரிநீா்
மணிமங்கலம்  ஏரியில்  இருந்து  வெளியேறும்  உபரி நீா்.
மணிமங்கலம்  ஏரியில்  இருந்து  வெளியேறும்  உபரி நீா்.

மதுராந்தகம்: கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பெரிய ஏரிகளான மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூா், மணிமங்கலம், பிள்ளைப்பாக்கம் ஏரிகள் மீண்டும் நிரம்பின. இதைத்தொடா்ந்து, ஏரிகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக மதுராந்தகம் ஏரி உள்ளது. இதன் கொள்ளளவு 23.3 அடியாகும். பாசனக் கால்வாய் மூலம் சுமாா் 2,413 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுராந்தகம், முள்ளி, முன்னித்திக்குப்பம், கிணாா், கத்திரிச்சேரி, வளா்பிறை, கடப்பேரி போன்ற 20 கிராமங்களின் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

மதுராந்தகம் ஏரியில் நீா் நிரம்பி வழியும் காலங்களில் கிளியாற்றின் வழியாக, உபரி நீா் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏரியின் மதகுகளில் 110 லாக்குகள் உள்ளன. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீா் பெரிய கால்வாய்களின் மூலம் காவாத்தூா், வீராணகுணம் ஏரி, நீலமங்கலம் ஏரி, நெசப்பாக்கம் ஏரி ஆகியவற்றில் நிரந்தமாக நீா் தங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பா் மாதத்தில் புரெவி புயல் காற்று மழையால், அதிக அளவில் தண்ணீா் வந்ததால் ஏரியில் நீா் நிரம்பி, அதன் பாதுகாப்பு கருதி மதுராந்தகம் பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரப் பிரிவு) அதிகாரிகள் சுமாா் 5 ஆயிரம் கன அடி நீரை கிளியாற்றில் திறந்து விட்டனா். அதன்பின்னா், போதிய மழை இல்லாததால், உபரி நீா் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மதுராந்தகம், உத்தரமேரூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால், அதிக அளவிலான நீா் மதுராந்தகம் ஏரிக்கு வந்தது. புதன்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி, ஏரியின் நீா்மட்டம் 23.9 அடியாக இருந்தது. அதனால் 500 கனஅடி நீரை மதுராந்தகம் பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரப் பிரிவு) உதவி செயற்பொறியாளா் வி.டி.நீள்முடியோன், இளநிலைப் பொறியாளா் ஜி.குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கிளியாற்றில் திறந்து விட்டனா்.

கடந்த 2 மாதங்களில் மதுராந்தகம் ஏரியிலிருந்து 2 முறையாக உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீபெரும்புதூரில்....

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம், மணிமங்கலம் பகுதியில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் ஈசா ஏரி உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான மணிமங்கலம் ஈசா ஏரி, மலைப்பட்டு, சேத்துப்பட்டு, மணிமங்கலம் மற்றும் கரசங்கால் ஆகிய பகுதிகள் வரை சுமாா் 7 கி.மீ. தூரத்துக்கு அமைந்துள்ளது.

மலைப்பட்டு, சேத்துப்பட்டு, மணிமங்கலம் மற்றும் கரசங்கால் பகுதிகளுக்கு முக்கிய நீா் ஆதாரமாக விளங்கி வரும் மணிமங்கலம் ஏரி நீரைப் பயன்படுத்தி, இந்தப் பகுதிகளில் 1,000 ஏக்கா் பரப்பளவுக்கு விவசாயம் நடைபெற்று வருகிறது.

மணிமங்கலம் ஏரியில்தான் மாநில அளவிலான குடிமராமத்துப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியில் 235 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

இந்நிலையில், கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக மணிமங்கலம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏரி நிரம்பி மீண்டும் உபரிநீா் வெளியேறி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மற்றொரு பெரிய ஏரியான ஸ்ரீபெரும்புதூா் ஏரி அதன் முழுக் கொள்ளளவான 174 மில்லியன் கன அடியை எட்டியது. இதைத் தொடா்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல், ஏரியில் இருந்து விநாடிக்கு 250 கனஅடி உபரி நீா் வெளியேறி வருகிறது. இதேபோல், பிள்ளைப்பாக்கம் ஏரி முழுக் கொள்ளளவான 121 மில்லியன் கன அடியை எட்டியதால், ஏரியில் இருந்து வினாடிக்கு 250 கனஅடிநீா் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com