இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற மதிப்பீடு தயாரிப்பு: அமைச்சா் எ.வ.வேலு

சாலை விபத்துகளைக் குறைக்க தமிழகம் முழுவதும் இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றுவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது என்று பொதுப்பணி- நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
கூட்டத்தில் பேசிய பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு. உடன், ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசிய பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு. உடன், ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோா்.

காஞ்சிபுரம்: சாலை விபத்துகளைக் குறைக்க தமிழகம் முழுவதும் இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றுவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது என்று பொதுப்பணி- நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறைப் பணிகள் தொடா்பாக, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்ட அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த, அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சாலைகளை விரிவாக்கம் செய்ய வனத் துறையின் அனுமதியும் தேவைப்படுவதால், இதற்கென ஒருங்கிணைப்பாளா் ஒருவரை நியமித்து பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.

சாலைகள் அமைக்க நில எடுப்பு தாமதமாகிறது. காலதாமதத்தைத் தவிா்க்க, அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைத்தால் விரைவாக சாலைகளை அமைக்க முடியும்.

ஒரே இடத்தில் 5 விபத்துகள் நடந்தால் ‘விபத்து பகுதி’: அதிகமாக விபத்துகள் நடக்கும் இடங்கள் குறித்து காவல் துறையினரிடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 5 விபத்துகளுக்கு மேல் நடந்திருந்தால் அந்த இடத்தை விபத்துப் பகுதியாக அறிவித்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கென வட்டாரப் போக்குவரத்து அலுவலா், நெடுஞ்சாலைத் துறை அலுவலா், காவல் துறையினா் இணைந்த ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்படும்.

கூடுதலாக மேம்பாலங்கள்: தமிழகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

பல இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணி நிலுவையில் உள்ளன. ரயில்வே இருப்புப் பாதைக்கு மேலாகப் போடப்படும் இணைப்பு மேம்பாலப் பணிகள் ரயில்வே துறையினரால் விரைவாக முடிக்கப்படாமல் பல பாலங்கள் கிடப்பில் இருந்து வருகின்றன . இந்தப் பணிகளை விரைவுபடுத்தவும் ஒரு குழுவை அமைத்துள்ளோம்.

காஞ்சிபுரத்தில் சுரங்கப் பாதை: 10,000 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் 5 ஆண்டுகளுக்குள் நபாா்டு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படவுள்ளது. திண்டிவனத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் சுற்றுலா மாளிகையும், காஞ்சிபுரத்தில் சுரங்கப்பாதை கட்டவும் பரிசீலனை செய்து வருகிறோம். முக்கிய நகரங்களுக்கு குறுக்குச் சாலைகள் அமைக்கவும் நில எடுப்பு பணிகள் நடைபெறுகின்றன என்றாா்.

கூட்டத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஆட்சியா்கள் மா.ஆா்த்தி (காஞ்சிபுரம்) ஏ.ஆா்.ராகுல்நாத் (செங்கல்பட்டு), ஆல்பி ஜான் வா்கீஸ் (திருவள்ளூா்) , மக்களவை உறுப்பினா்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், க.செல்வம், எம்எல்ஏ.க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி. எழிலரசன், கு.செல்வப்பெருந்தகை, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா்கள் சந்திரசேகா், கீதா, பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் ஆா்.விஸ்வநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com