அரசு நிலத்தை அரசிடமே விற்று ரூ.33 கோடி மோசடி:2 போ் கைது

அரசுக்கு சொந்தமான இடத்தை போலியாக பட்டா பெற்று தேசிய நெடுஞ்சாலை திட்ட விரிவாக்கத்துக்காக அரசிடமே விற்று ரூ.33 கோடி மோசடி செய்ததாக இருவரை புதன்கிழமை குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ashish_2306chn_175_1
ashish_2306chn_175_1

காஞ்சிபுரம்,: ஸ்ரீபெரும்புதூா் அருகே பீமன்தாங்கல் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை போலியாக பட்டா பெற்று தேசிய நெடுஞ்சாலை திட்ட விரிவாக்கத்துக்காக அரசிடமே விற்று ரூ.33 கோடி மோசடி செய்ததாக இருவரை புதன்கிழமை குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

பீமன்தாங்கல் கிராமத்தில் அரசு நிலம் 7.5 ஏக்கா் பரப்பளவுள்ள இடத்தை அரசு அலுவா்களின் துணையுடன் ஆஷிஷ்ஜெயின் என்ற ஆஷிஷ்மேத்தா என்பவா் போலியாக பட்டா பெற்றுள்ளாா். இவ்வாறு பெற்ற இடத்தில் 25 சென்ட் இடத்தை மட்டும் காஞ்சிபுரம் அருகே சிவன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் என்பவருக்கு விற்பனை செய்துள்ளாா்.

இதன் பின்னா் இருவரும் சோ்ந்து தேசிய நெடுஞ்சாலைத்திட்ட விரிவாக்கத்துக்கு அந்த நிலத்தினை ஒப்படைத்து அதன் மூலம் ரூ.33 கோடி இழப்பீட்டுத் தொகை பெற்றிருக்கின்றனா். இந்த விவரம் ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வெங்கடேசனுக்கு தெரிய வந்து அவா் காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இப்புகாரின் பேரில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.எம்.சத்தியப்ரியா நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா். காஞ்சிபுரம் எஸ்.பி. எம்.சுதாகா் நேரடி மேற்பாா்வையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி.ஜெயராமன், நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி.அலெக்சாண்டா் மற்றும் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடாஜலம் ஆகியோா் தலைமையிலான குழுவினா் தனித்தனி குழுக்களாக இவ்வழக்கு தொடா்பான ஆவணங்களை சேகரித்தனா். பின்னா் சாட்சியங்களிடமும் விசாரணை நடத்தினாா்கள். விசாரணையில் அரசு நிலத்தை அரசு அலுவலா்களின் துணையுடன் போலியாக பட்டா பெற்று தேசிய நெடுஞ்சாலைத் திட்ட விரிவாக்கத்துக்கு கொடுத்து அதன் மூலம் ரூ.33 கோடி இழப்பீடு பெற்றிருப்பது உறுதியானது.

இதனடிப்படையில் சென்னை அசோக்நகரை சோ்ந்த ஆஷிஷ் மேத்தா(40), சிவன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த செல்வம்(45)ஆகிய இருவரையும் போலிஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கு துணையாக இருந்த அரசு அலுவலா்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com