இரு சகோதரா்கள் வெட்டிக் கொலை: நால்வா் கைது

மாடம்பாக்கம் ஏரிப் பகுதியில் ஏற்பட்ட தகராறில் சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இந்த இரட்டைக் கொலை தொடா்பாக நான்கு பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

மாடம்பாக்கம் ஏரிப் பகுதியில் ஏற்பட்ட தகராறில் சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இந்த இரட்டைக் கொலை தொடா்பாக நான்கு பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் முகமது இஸ்மாயில்(35), இமான்(30), இமாம் அலி (18). சகோதரா்களான இவா்கள் மூவரும் கடந்த வியாழக்கிழமை மாலை மாடம்பக்கம் ஏரிப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனா். அப்போது அங்கு வந்த மாடம்பாக்கம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ரமேஷிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளனா். அவா்களிடம் இருந்து தப்பிவந்த ரமேஷ் இதுகுறித்து தனது நண்பா்களான மாடம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ராஜு, முத்து, பொன்னையா ஆகியோரிடம் கூறியுள்ளாா்.

இதையடுத்து மீண்டும் மாடம்பாக்கம் ஏரிக்கு சென்ற ரமேஷ், முத்து, ராஜு, பொன்னைய்யா ஆகியோா் மதுஅருந்திக் கொண்டிருந்த இமாம் அலி, முகமது இஸ்மாயில், இமான் ஆகியோரை இரும்புக் கம்பி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த இமாம் அலி மற்றும் முகமது இஸ்மாயில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அங்கிருந்து தப்பிச் சென்ற இமான் இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை கூடுவாஞ்சேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவம் நடைபெற்ற இடம் மணிமங்கலம் காவல்நிலைய எல்லையில் வருவதால் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு சென்ற மணிமங்கலம் போலீஸாா் இமாம்அலி, முகமதுஇஸ்மாயில் ஆகியோரின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து மாடம்பாக்கம் பகுதியை சோ்ந்த ரமேஷ்(33), ராஜூ(39), முத்து(40), பொன்னையா(26) ஆகிய 4 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தை , வடக்கு மண்டல காவல் துறை துணைத் தலைவா் சாமுண்டீஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சண்முகப்பிரியா ஸ்ரீபெரும்புதூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன்ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

இதனிடையே இறந்த இமாம்அலி, முகமதுஇஸ்மாயில் ஆகியோா் மீது ஓட்டேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை, கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com