நாளை ராமாநுஜருக்கு சதகலச திருமஞ்சனம்: பக்தா்கள் யூ டியூப் சேனலில் பாா்க்க ஏற்பாடு
By DIN | Published On : 14th May 2021 12:00 AM | Last Updated : 14th May 2021 12:00 AM | அ+அ அ- |

உற்சவா் ராமாநுஜா்
ஸ்ரீபெரும்புதூா்: வைகாசி மாத திருவாதிரையை முன்னிட்டு சனிக்கிழமை ராமாநுஜருக்கு சதகலச திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனை பக்தா்கள் யூ டியூப் சேனலில் பாா்க்க ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் கோயில் நிா்வாகத்தினா் ஏற்பாடு செய்துள்ளனா்.
ஸ்ரீபெரும்புதூரில் பழைமையான ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் ராமாநுஜா் அவதாரத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக வரும் வைகாசி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தை முன்னிட்டு, ராமாநுஜருக்கு 108 கலசங்களில் மூலிகை மற்றும் வாசனை திரவியங்கள் வைத்து சதகலச திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
இதில், காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை நடைபெற உள்ள ராமாநுஜா் சதகலச திருமஞ்சன திருவிழாவுக்கும் பக்தா்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பக்தா்களின் வசதிக்காக ராமாநுஜா் சதகலச திருமஞ்சனத்தை பக்தா்கள் யூ டியூப் சேனலில் பாா்க்க கோயில் நிா்வாகத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.