வடகிழக்குப் பருவமழை: காஞ்சிபுரத்தில் 5 பேர் சாவு, 52 பேர் மீட்பு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ரப்பர் படகுகளில் சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர்.
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ரப்பர் படகுகளில் சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர்.

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதுடன் பல மணி நேரம் தேடியும் வெள்ளத்தில் சிக்கிய இருவரைக் காணவில்லை.

819 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியது: காஞ்சிபும் பாலாற்றில் 120 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,60,000 கனஅடி தண்ணீர் பாலாற்றில் வந்துள்ளது. சனிக்கிழமை இது ஒரு லட்சம் கனஅடியாக நீர் வரத்து குறைந்துள்ளது. பொதுப்பணித்துறை பாலாறு வடிநில கோட்டத்தின் மேற்பார்வையில் காஞ்சிபுரத்தில் 381, செங்கல்பட்டு 528, சென்னை 16, திருவண்ணாமலை 93, திருவள்ளூர் 4 உட்பட மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன. இவற்றில் 819 ஏரிகள் 100 சதவிகிதமும்,156 ஏரிகள் 70 சதவிகிதமும், 43 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியிருக்கின்றன. இதுவரை 50 ஆயிரம் மணல் மூட்டைகள் ஏரிகள் உடைப்புக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எம்.சண்முகம் தெரிவித்தார்.

5 பேர் உயிரிழப்பு, இருவரைக் காணவில்லை: கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் இம்மாதம் 18 ஆம் தேதி வரையான வடகிழக்குப் பருவமழையின் போது வாலாஜாபாத் அருகே கோயம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ்(15)மின்னல் தாக்கியும், ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுடாயர் குப்பத்தைச் சேர்ந்த ஸ்ரீவர்தினி(7)மின்சாரம் தாக்கியும் உயிரிழந்துள்ளனர். புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகனான பிரகாஷ்(35). இவரது சகோதரி துர்காதேவி(24), சிறுபனையூர் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன்(65) ஆகிய 3 பேரும் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர். 

இவர்களைத் தவிர சின்ன ஐயங்கார்குளத்தை சேர்ந்த நகராட்சி பம்ப் ஆப்பரேட்டரான கருணாகரன்(52), பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சமையல்காரர் பச்சையப்பன்(29), இருவரும் வெள்ளம் இழுத்துச் சென்றதில் தீயணைப்புத் துறையினர் பலமணி நேரங்கள் தேடியும் இருவரையும் காணவில்லை. கால்நடைகளில் 22 பசு, 38 கன்றுக்குட்டி,3 எருமை, 35 வாத்துகள், 41 ஆடுகளை வெள்ளம் இழுத்து சென்றுள்ளது. 269 வீடுகள் பகுதியாகவும், 23 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. வேலியூரில் 920 ஏக்கரும், கோவிந்தவாடி அகரத்தில் 20 ஆயிரம் ஏக்கரும் நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 

52 பேர் உயிருடன் மீட்பு: வெள்ளப்பெருக்கு காரணமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட செவிலிமேடு முத்துமாரியம்மன் கோயிலுக்குள் இருந்த மூதாட்டி பத்மாவதி(75)மாசிலாமணி முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் உள்ள குடியிருப்புகளில் இருந்த 30 பேர்,வில்லிவலத்தில் 16 பேர், பெரியார் நத்தத்தில் 5 பேர் மற்றும் 41 ஆடுகளையும் தீயணைப்புத்துறையினரும்,பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து ரப்பர்படகுகளில் சென்று அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

ஒரே நாளில் 551.36 மி.மீ.மழைப்பதிவு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும்(மழையளவு}மி.மீட்டரில்)காஞ்சிபுரம் 171.60, ஸ்ரீபெரும்புதூர் 76, உத்தரமேரூர் 144, வாலாஜாபாத் 61.80, செம்பரம்பாக்கம் 49, குன்றத்தூர் 48.96 உட்பட மாவட்டத்தின் மொத்த மழையளவு 551.36,சராசரி மழையளவாக 91.89 ஆகவும் பதிவாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் அதிக அளவு மழைப்பொழிவு இருந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com