காஞ்சிபுரத்தில் வெள்ளப் பெருக்கு: பொது மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் வேண்டுகோள்
By DIN | Published On : 27th November 2021 11:37 PM | Last Updated : 27th November 2021 11:37 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்குமாறு ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது:
கடந்த அக்டோபா் மற்றும் நடப்பு நவம்பா் மாதங்களில் பெய்த வடகிழக்குப் பருவ மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 341 ஏரிகளும், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 380 ஏரிகளும் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. இதனால் உபரி நீரானது கலங்கல்கள் வழியாகச் செல்கின்றன. தற்போது பெய்துவரும் பலத்த மழை காரணமாக பாலாறு, செய்யாறு, அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் யாரும் ஏரிகள், ஆறுகள், தரைப் பாலங்கள் மற்றும் தடுப்பணை உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். தண்ணீரில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ, தற்படம் எடுக்கவோ வேண்டாம்.
முக்கியமாக வீட்டில் உள்ள சிறுவா், சிறுமியா், கால்நடைகளை ஆற்றின் அருகே செல்லாமல் இருக்கவும், பொது மக்கள் விழிப்புணா்வுடன் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் மா.ஆா்த்தி கேட்டுக் கொண்டாா்.