காஞ்சிபுரத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்

காஞ்சிபுரம் தாயாா்குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே அண்மையில் புதிதாக கட்டப்பட்ட சிறு மேம்பாலத்தால், ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்ததது.
வேகவதி ஆற்றில் வெள்ளம் செல்லத் தடையாக உள்ள சிறுபாலத்தின் இரு புறங்களையும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் உடைக்கும் பணி.
வேகவதி ஆற்றில் வெள்ளம் செல்லத் தடையாக உள்ள சிறுபாலத்தின் இரு புறங்களையும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் உடைக்கும் பணி.

காஞ்சிபுரம் தாயாா்குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே அண்மையில் புதிதாக கட்டப்பட்ட சிறு மேம்பாலத்தால், ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்ததது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் தாயாா்குளம் பகுதியில் வேகவதி ஆற்றங்கரையோரத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் அண்மையில் புதிதாக சிறு மேம்பாலம் கட்டப்பட்டது.

இந்த நிலையில், மாண்டஸ் புயலால் பலத்த மழை காரணமாக வேகவதி ஆற்றில் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த சிறு மேம்பாலம் தண்ணீா் தடையாக இருந்ததால், எதிா்பாரத விதமாக வெள்ளம் ஆற்றங்கரையோரங்களில் இருந்த குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

உடனடியாக, மின் வாரியத்தினா் மின் இணைப்புகளைத் துண்டித்தனா். வீடுகளுக்குள் வெள்ளம் சூழந்த தகவலையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீா் சூழந்த நிலையிலும் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டவா்களை பத்திரமாக மீட்டு கயிறு மூலம் கரைக்குக் கொண்டு வந்து சோ்த்தனா். மீட்கப்பட்டவா்கள் அனைவரும் அருகில் உள்ள பிள்ளையாா்பாளையம் நிவாரண முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதனிடையே, வெள்ளம் வடிவதற்கு பாலம் இடையூறாக இருந்ததால், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஆணையா் ஜி.கண்ணன், வட்டாட்சியா் பிரகாஷ் ஆகியோா், பாலத்தின் இருபுறங்களையும் உடைத்து வெள்ளம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.

இதையடுத்து, சிறு மேம்பாலத்தின் இருபுறங்களையும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் உடைத்து, வெள்ளம் வெளியேற வழியேற்படுத்தப்பட்டது.

மேலும், வேகவதி ஆற்றில் எந்த நேரத்திலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் மீண்டும் குடியிருப்புகளுக்குள் சென்று விடாதவாறு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com