மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்: சுற்றுலா வாகன நுழைவு கட்டணம் ரத்து
By DIN | Published On : 05th July 2022 01:44 PM | Last Updated : 05th July 2022 01:44 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை இரண்டு மாதங்களுக்கு சுற்றுலா வாகன நுழைவு கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வதுண்டு. இங்கு வரும் பெரும்பாலோனோர் கார், வேன், ஆட்டோ, பஸ் என தனித்தனி வாகனங்களில் வருகின்றனர். இவ்வாகனங்களுக்கு மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணமும், மாவட்ட உள்ளூர் திட்ட குழுமம் நிறுத்துமிட கட்டணமும் வசூலிக்கின்றது.
இதையும் படிக்க: சேவைக் கட்டணத்துக்குத் தடை! வசூலித்தால் என்ன செய்ய வேண்டும்?
இரண்டு கட்டணங்களையும் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஒன்றாக வசூலித்து இரண்டு நிர்வாகங்களும் சதவீத அடிப்படையில் பகிர்ந்து கொள்கின்றன. ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பொது ஏலம் நடத்தி தனியாருக்கு ஓராண்டு குத்தகை உரிமம் வழங்கப்படுவது வழக்கம். கட்த ஆண்டு பிப்ரவரி மாத்தில் ஐந்து முறை பொது ஏலம் நடத்த முயன்றும் ஆரம்ப கேட்புத்தொகை அதிகம் என்பதாக கருதி குத்தகைதாரர்கள் யாரும் ஏலம் கோரவில்லை.
இதனால் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமே நுழைவு கட்டணம் மற்றும் வாகன நிறுத்துமிட கட்டணம் இரண்டையும் சேர்த்து வசூலித்து வந்தது. இந்நிலையில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதால் இப்போட்டிகளில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து 187 நாடுகளை சேர்ந்த 2500 செஸ் விளையாட்டு வீரர்கள் வர உள்ளனர்.
இவர்கள் இங்கு வரும்போது மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண வாய்ப்பு உள்ளதாலும், சர்வதேச நாடுகளை சேர்ந்த ரசிகர்கள், முக்கிய பிரமுகர்கள், பாராளுமன்ற எம்.பி.க்கள் என அதிகமானோர் வர உள்ளதாலும் மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகன நுழைவு கட்டணத்தை ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேஷ் தெரிவித்துள்ளார்.