முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாத சுவாமி திருக்கோயிலில் தேர்த் திருவிழா
By DIN | Published On : 14th March 2022 12:48 PM | Last Updated : 14th March 2022 12:48 PM | அ+அ அ- |

பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம் (உள்படம்). தேரில் பவனி வந்த ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வீ.பாரதிதாசன் கொடியசைத்து திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண திருவிழா கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினசரி சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் திருவீதியுலா வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு ஏகாம்பரநாதரும், ஏலவார் குழலி அம்மனும் அதிகாலையில் தேருக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து தேரினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வீ.பாரதிதாசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
தேரோட்டத்தில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்கள் பணி ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன், அறநிலையத்துறை இணை ஆணையர் பொன்.ஜெயராமன், உதவி ஆணையர் ஆ.முத்துரெத்தினவேலு, கோயம்புத்தூர் காவல்துறை துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில்குமார், அரக்கோணம் வி.மோகன்பாபு, சிவார்ப்பணம் அறக்கட்டளையின் நிர்வாகி ஆடிட்டர் எஸ்.சந்திரமௌலி, உத்தரகண்ட் பிரம்ம பிரபுசைதன்யா ரிஷிகேஷ், மகாலெட்சுமி அறக்கட்டளையின் நிர்வாகி மகாலெட்சுமி சுப்பிரமணியம், கடிகாரம் அறக்கட்டளையை சேர்ந்த கே.ரமேஷ் சேதுராமன், அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் செந்தில்குமார், ந.தியாகராஜன், பரந்தாமன், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், மயிலாடுதுறை அறநிலையத்துறை மண்டல ஸ்தபதி பி.மல்லைராஜன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தில் கலைநிகழ்ச்சிகள்
தேரோட்ட விழாவில் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளா, கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களைச் சேர்ந்த இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள், தமிழகம் முழுவதுமிருந்து 1000-க்கும் மேற்பட்ட சிவூபதகணங்களின் சிவ வாத்தியங்கள், மகளிர் கோலாட்டம் ஆகியனவும் நடைபெற்றது. ஏராளமான சிவனடியார்கள் ருத்திராட்ச மாலைகளை அணிந்தவாறு நடனம் ஆடியபடியே வந்தனர்.
பக்தர்களும்,பொதுமக்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதிருவேகம்பன் சிவாலய அறக்கட்டளையின் தலைவர் பி.பன்னீர் செல்வம், செயலாளர் ஆர்.நந்தகுமார், மின்மணி குருப்ஸ் ஜி.சரவணன், உறுப்பினர் பத்மனாபன் ஆகியோர் தலைமையிலான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஏகாம்பரநாதருக்கு மகா அபிஷேகம்
தேர் மாலையில் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சுவாமியும், அம்மனும் ஆலயத்துக்கு எழுந்தருளினர். பின்னர் அறக்கட்டளை சார்பில் மகாஅபிஷேகம் நடந்தது. நாளை புதன்கிழமை திருக்கோயில் வரலாற்றை விளக்கும் வெள்ளி மாவடி சேவைக் காட்சியும், 18 ஆம் தேதி அதிகாலையில் ஏலவார்குழலிக்கும் ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாணமும் நடைபெறுகிரறது. 20 ஆம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.