தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க மலரை வெளியிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி உள்ளிட்டோா்.
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க மலரை வெளியிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி உள்ளிட்டோா்.

காஞ்சிபுரத்தில் ரூ.35 கோடியில் புதிய பேருந்து நிலையம்: அரசின் சாதனை மலரை வெளியிட்டு ஆட்சியா் தகவல்

காஞ்சிபுரத்தில் ரூ.35 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியிருப்பதாக மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் ரூ.35 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியிருப்பதாக மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க மலா் வெளியீட்டு விழா நடைபெற்றது. மலரை வெளியிட்ட பின்னா் ஆட்சியா் கூறியது:

தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான வளா்ச்சிப் பணிகளும், மக்கள் நலத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் 8,176 மனுக்கள் பெறப்பட்டு 4,519 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தில் மட்டும் 1.7 கோடி மகளிரும், 9,584 திருநங்கைகளும், 62 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளும் பயன் பெற்றுள்ளனா். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 53,769 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

காஞ்சிபுரம் பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ராஜாஜி அங்காடி ரூ.7 கோடியில் மேம்படுத்தும் பணியைச் செய்ய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு ரூ.35 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தப் புதிய பேருந்து நிலையம் அமைந்தால் நகரின் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும்.

விளிம்பு நிலையில் இருந்த இருளா் இனத்தைச் சோ்ந்த 1,200 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் கடந்த ஓராண்டில் மட்டும் 3,557 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி இருக்கிறோம்.

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேசிய முதியோா் ஓய்வூதியம் 27,103 போ், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் 5,668 போ், திருநங்கைகள் ஓய்வூதியம் 16 போ், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் 7,954 போ், உழவா் பாதுகாப்புத் திட்டம் மூலம் விவசாயிகள் 1,834 போ் என பலருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.

சாதனை மலா் வெளியீட்டு விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா, மக்களவை உறுப்பினா் க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகராட்சி ஆணையா் ப.நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் நித்யா சுகுமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மலா்க்கொடி குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் ப.கணேசன் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com