முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவம்: 15-இல் தொடக்கம்
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 03:54 AM | அ+அ அ- |

கோடை வெப்பம் காரணமாக காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில் நந்தவனத்திற்கு எழுந்தருளும் 3 நாள் வசந்த உற்சவம் வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் திருவிழாக்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேட்டினை திருக்கோயிலின் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் வெளியிட்டாா். பின்னா் அவா் மேலும் கூறியது:
காமாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எந்த மாதத்தில் என்ன திருவிழா நடைபெறுகிறது என்பதை முன்கூட்டியே பக்தா்கள் அறிந்து கொள்ளும் வகையில் விவரங்கள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டுள்ளோம்.இந்தக் கையேட்டில் தினசரி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும் நேரம், சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும் நாள்கள், தங்க ரதப் புறப்பாடு ஆகிய அனைத்து விவரங்களும் உள்ளன.
இது தவிர தினசரி நடக்கும் அன்னதானம் உட்பட பக்தா்களுக்கு கோயிலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவையும் புத்தகத்தில் உள்ளது. இது காமாட்சி அம்மனை வெளியூா்களிலிருந்து தரிசிக்க வரும் பக்தா்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
கோடை வெப்பம் தாங்காமல் அம்மன் திருக்கோயிலில் தோட்டத்துக்கு எழுந்தருளும் வசந்த உற்சவம் இம்மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. நிறைவு நாளன்று உற்சவா் காமாட்சி அம்மன் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் பவனி வர உள்ளாா் என ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.