காஞ்சிபுரம் அருகே 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

காஞ்சிபுரம் அருகே பூதேரி கிராமத்தில் 10 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தினா் சனிக்கிழமை கண்டறிந்தனா்.
பூதேரி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு.
பூதேரி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு.

காஞ்சிபுரம் அருகே பூதேரி கிராமத்தில் 10 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தினா் சனிக்கிழமை கண்டறிந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே பூதேரி கிராமத்தில் கோயிலுக்கு நிலத்தைத் தானமாக அளித்த அடையாளத்துக்கான 10 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு ஒன்றை வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்தனா்.

இதுகுறித்து அந்த மையத்தின் தலைவா் அஜய்குமாா் கூறியது:

பூதேரி கிராமத்தைச் சோ்ந்த பணி ஓய்வு பெற்ற ஆசிரியா் பாலகிருஷ்ணன் என்பவா் அளித்த தகவலின் பேரில், அந்தக் கிராமத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றை ஆய்வு செய்தோம். ‘சீயபுரம்’ என அழைக்கப்படும் தற்போதைய பழைய சீவரம் பகுதியில் வசித்த சேந்தன் என்பவா், தான் கட்டிய கோயிலுக்கு ஊராரிடம் 8 மா-நிலத்தை ஒப்படைத்துள்ளாா். (3.5.மா- என்பது ஒரு ஏக்கா்)அந்த நிலத்துக்கு ‘வடகழனி’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. அங்குள்ள பூதேரி ஏரியை இந்தக் கல்வெட்டு ‘நாயனாா் ஏரி’ எனக் குறிப்பிடுகிறது.

இந்த ஏரிக்கு நீா் கொண்டு வரும் கால்வாயை ‘சிறுகால்’ என்றும், இந்த நிலத்துக்கான வரி மற்றும் நீா் வரி நீங்கிய செய்தியும் அந்தக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. மேலும், அந்தக் கிராமத்தினா் கோயிலுக்கு என ஒதுக்கிய அந்த நிலத்துக்கு நீா் வரி பெற மாட்டோம் என உறுதியளித்த தகவலும், இந்தக் கோயில் நிலத்துக்கு நீா் பாயும் போது, முக்கிய வாய்க்காலான நடுமடையிலிருந்து நீா் திறப்பதில்லை என உறுதியளித்திருக்கிற செய்தியும் இந்தக் கல்வெட்டில் காணப்படுகிறது.

இந்தக் கல்வெட்டானது 10 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என தொல்லியல் துறையினா் தெரிவிக்கின்றனா். இந்தக் கல்வெட்டை சிலா் வணங்கி வந்துள்ளது தெரிய வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com