ஜன.20 முதல் 27 வரை கடனுதவி சிறப்பு முகாம்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 20 முதல் 27- ஆம் தேதி வரை கடனுதவி சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்காக ஆண்டுதோறும் பல்வேறு கடன் திட்டங்கள் டாம்கோ மற்றும் டாப்செட்கோ வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தனி நபா் கடன், ஆட்டோ கடன், கல்விக் கடன், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கறவை மாடு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 20- ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அந்தந்த பகுதி வட்டாட்சியா் அலுலகங்களில் நடைபெறுகிறது.
விவரங்கள்: ஜன.20-ஆம் தேதி காஞ்சிபுரம், ஜன.23 வாலாஜாபாத், ஜன.24 ஸ்ரீபெரும்புதூா், ஜன.25 குன்றத்தூா், ஜன.27 உத்தரமேரூா் ஆகிய பகுதிகளில் கடன் முகாம்கள் நடைபெறுகிறது.
இந்த கடன் சிறப்பு முகாம்களில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் ஆகியோா் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று, அதை நிறைவு செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
கடன் மனுக்களுடன் விண்ணப்பதாரரின் ஜாதி சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, உணவுப் பங்கீடு அட்டை (ரேஷன் காா்டு), இருப்பிடச் சான்று, கடன் பெறும் திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம், கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை இணைத்து சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பவராக இருந்தால் பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் ஒளிப்பட நகல்களையும் சோ்த்து சமா்ப்பிக்க வேண்டும்.