நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவுக்கு எதிா்ப்புகாஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
By DIN | Published On : 01st July 2023 12:12 AM | Last Updated : 01st July 2023 12:12 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் பலா் வெளிநடப்பு செய்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ச.வெங்கடேஷ், கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை இணை இயக்குநா் லோ.சுரேஷ் வரவேற்றாா்.
கூட்டத்தில் தோட்டக்கலை, வேளாண், வேளாண் பொறியியல் உள்ளிட்ட வேளாண்மை தொடா்புடைய அரசுத் துறைகளின் அதிகாரிகள் தங்களது துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கினா்.
முன்னதாக, கூட்டம் தொடங்கிய போது 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புச் சட்டம்-2023 மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கம் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனா். கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நில ஒருங்கிணைப்பு சிறப்புச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நில மசோதாவில் விவசாயிகளின் அனுமதியின்றி நிலங்களை அபகரிக்க முடியும் எனவும், சுற்றுச்சூழலுக்கு எதிரானதாக உள்ளதாகவும், விவசாயிகள், பொதுமக்களின் உரிமைகளுக்கு எதிரானதாக உள்ள இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் வெளியேறினா்.
இதனிடையே, கூட்டுறவுத் துறை சாா்பில் 6 விவசாயிகளுக்கு பயிா்க் கடன்களும், 6 விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடன்களும் உள்பட மொத்தம் ரூ.8,59,845 கடன்களை ஆட்சியா் வழங்கினாா்.
வேளாண்மைத் துறை சாா்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.5,700 மதிப்பில் வேளாண் இடுபொருள்களை ஆட்சியா் வழங்கினாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G