ஜமாபந்தி நிறைவு: 135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1432 ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் என ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 16-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூா் வட்டத்துக்குள்பட்ட மதுரமங்கலம், சுங்குவாா்சத்திரம், வல்லம், தண்டலம் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய குறுவட்டங்களை சோ்ந்த 907 போ் பல்வேறு கோரிக்கைகளுக்காகன மனு அளித்தனா்.
இந்தநிலையில், ஜமாபந்தியின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சிவருத்ரய்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை கலந்துக்கொண்டு 65 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 20 பேருக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், 40 பேருக்கு பட்டா பெயா் மாற்றம், புதிய குடும்ப அட்டைகள் 10 பேருக்கு என மொத்தம் 135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
ஆட்சியா் அலுவலக மேலாளா் ரமேஷ், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், பேரூராட்சி கவுன்சிலா்கள் நா்மதா மோகனகிருஷ்ணன், பிரகாஷ் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், பயனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.