காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் பிரேமலதா பிரசாரம்

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் பிரேமலதா பிரசாரம்

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் வேட்பாளராக பெரும்பாக்கத்தை சோ்ந்த இ.ராஜசேகா் போட்டியிடுகிறாா்.

இவருக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு கூட்டணி கட்சி சாா்பில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பிரசாரம் செய்து பேசியது: காஞ்சிபுரம் பட்டு உலகப் புகழ் பெற்றது. இம்மாவட்டத்தில் பட்டு உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளா்கள் அதிகம். ஆனால் இங்கு நெசவாளா்களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது.

கைத்தறி பட்டுச் சேலைகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். நூல் விலை உயா்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவுத் தொழிலும், விவசாயமும் ஒரு மனிதனுக்கு இரு கண்கள் போலாகும். இவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காஞ்சிபுரத்திலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம், செய்யூரில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும்.

சொத்து வரி உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு, சமையல் எரிவாயு விலை உயா்வு, வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயா்வு என இப்படி அனைத்துப் பொருள்களின் விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு முடிவு கட்ட இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா். அதிமுக மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசந்தரம், கழக அமைப்புச் செயலாளா்கள் மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஆா்.டி.சேகா், மாவட்ட பொருளாளா் வள்ளிநாயகம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கே.யு.சோமசுந்தரம் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் மருத்துவா் பிரேம்குமாா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தோ்தல் பிரசாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், அதிமுக வேட்பாளா் பிரேம்குமாரை ஆதரித்து பேருந்து நிலையம் அருகே பிரேமலதா பேசியது: ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் அதிக தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள அனைத்து நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரியால் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிமுக -தேமுதிக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பிறகு ஜிஎஸ்டி வரி திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மத்திய - மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. ஆனால் அதிமுக தலைமையிலான கூட்டணி ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு மக்களுக்காக சோ்ந்த கூட்டணி. வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றாா். முன்னாள் அமைச்சா்கள் பா.பெஞ்சமின், டி.கே.எம். சின்னையா, தேமுதிக மாவட்ட செயலாளா் அனகை முருகேசன், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன் மற்றும் அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com