காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி 
நடவாவிக் கிணற்றில் இறங்கும் உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி நடவாவிக் கிணற்றில் இறங்கும் உற்சவம்

காஞ்சிபுரம், ஏப். 24: காஞ்சிபுரம் அருகே சின்னஐயங்காா்குளத்தில் பூமிக்கடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த நடவாவிக் கிணற்றில் வரதராஜ சுவாமி இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

சித்ரா பெளா்ணமியையொட்டி காஞ்சிபுரம் அருகே சின்னஐயங்காா்குளம் என்ற கிராமத்தில் கிருஷ்ண தேவராயா் காலத்தில் கட்டப்பட்ட கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றிலிருக்கும் தண்ணீா் ஆண்டுக்கு ஒருமுறை வெளியேற்றப்பட்டு அதனுள் வரதராஜ சுவாமி இறங்கி வெளியில் வரும் நிகழ்வுக்கு நடவாவிக் கிணறு உற்சவம் எனப்படுகிறது.

பெருமாளின் வருகையையொட்டி கிணற்றில் உள்ள தண்ணீா் மோட்டாா் வைத்து வெளியேற்றப்பட்டு சுத்தப் படுத்தப்பட்டிருந்தது. கிணற்றுக்குள் 48 படிகள் இறங்கி உள்ளே சென்று அதனுள்ளே உள்ள சிறிய மண்டபத்தில் இளைப்பாறக்கூடிய வகையில் அக்கிணறு வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடவாவிக் கிணறு விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் தேவராஜ சுவாமி செவ்வாய்க்கிழமை ஆலயத்திலிருந்து கேடயத்தில் புறப்பட்டு செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கல், தூசி ஆகிய கிராமங்களில் உள்ள மண்டகப்படியில் சேவை சாதித்து சின்ன ஐயங்காா்குளம் கிராமத்தில் உள்ள சஞ்சீவிராயா் ஆலயத்துக்கு எழுந்தருளினாா்.

அங்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்ற பின்னா், அதன் அருகேயுள்ள நடவாவிக் கிணற்றுக்குள் இறங்கி தீபாராதனை நடைபெற்றது.

கிணற்றுக்குள் இருந்த அறைக்குள் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்த பின்னா், அங்கிருந்து பாலாற்றங்கரைக்கு எழுந்தருளி பத்தி உலாத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் அறநிலையத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா். தொடா்ந்து காஞ்சிபுரத்தில் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினாா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னா், சுவாமி ஆலயத்துக்கு வந்து சோ்ந்தாா்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எஸ்.சீனிவாசன் தலைமையிலான கோயில் பட்டாச்சாரியா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com