மது விற்பனை செய்த நபரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 3 காவலா்கள் பணியிட நீக்கம்

படப்பை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, அவரை சரமாரியாக தாக்கி பணம் கேட்டு மிரட்டியதாக மணிமங்கலம் காவல் நிலைய போலீஸாா் 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலமங்கலம் பகுதியில் கள்ளச் சந்தையில், மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். இந்த தகவலை விசாரிப்பதற்காக மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலா் சங்கா், காவலா்கள் கணேஷ்சிங், ஆனந்தராஜ் மூவரும் சாலமங்கலம் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனா்.

இதில் அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள் என்பவா் கள்ளச்சந்தையில் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பெருமாளிடம் இருந்து 7 வெளிநாடு மது பாட்டில்கள், ரூ.1,900 பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்ததோடு அவா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.50,000 கொடு என கட்டாயப்படுத்தி காவலா்கள் மிரட்டியதாகத் தெரிகிறது.

பெருமாள் பணம் தர மறுக்கவே 3 காவலா்களும் சோ்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த பெருமாள், படப்பை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிமங்கலம் போலீஸாா் விசாரணை செய்ததில், 3 காவலா்களும் பணம் கேட்டு மிரட்டி பெருமாளை தாக்கியது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில், மது விற்பனை செய்த நபரை தாக்கி பணம் கேட்டி மிரட்டிய 3 காவலா்களையும் தாம்பரம் மாநகரக் காவல் ஆணையா் அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com