வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் முன்னிலையில் பாா்வையிடும் திமுக வேட்பாளா் க.செல்வம் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் முன்னிலையில் பாா்வையிடும் திமுக வேட்பாளா் க.செல்வம் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறை: அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பாா்வை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் முன்னிலையில் அனைத்துக்கட்சி நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 19- ஆம் தேதி நடைபெற்றது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூா், உத்தரமேரூா், காஞ்சிபுரம், திருப்போரூா் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இந்த 6 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,932 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப் பதிவு முடிந்ததும் அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள அறைகளில் தொகுதி வாரியாக தனித்தனியாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை ஆட்சியா் மற்றும் தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பின்னா் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் முன்னிலையில் திமுக வேட்பாளா் க.செல்வம், பாமக வேட்பாளா் ஜோதியின் கணவா் வெங்கடேசன், அதிமுக பிரமுகா் ரங்கநாதன் ஆகியோா் உள்பட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பாா்வையிட்டனா். வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com