35 அடி நீளத்தில் பட்டுத் திரைச் சீலை: காஞ்சிபுரம் பட்டுப்பூங்கா நெசவாளர்கள் வடிவமைப்பு

காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவில் 5 நெசவாளர்கள் ஒருங்கிணைந்து ரூ.28 லட்சத்தில்  24 அடி அகலம் 35 அடி நீளத்தில் பட்டுத் திரைச்சீலையினை வடிவமைத்து வருவதாக
35 அடி நீளத்தில் பட்டுத் திரைச் சீலை: காஞ்சிபுரம் பட்டுப்பூங்கா நெசவாளர்கள் வடிவமைப்பு

காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவில் 5 நெசவாளர்கள் ஒருங்கிணைந்து ரூ.28 லட்சத்தில்  24 அடி அகலம் 35 அடி நீளத்தில் பட்டுத் திரைச்சீலையினை வடிவமைத்து வருவதாக அதன் வடிவமைப்பாளர் எஸ்.குமாரவேல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூரில் பட்டுப்பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு  தரமான பட்டுச் சேலைகளை நெசவாளர்கள் தயாரித்து வருகின்றனர். இப்பட்டுப்பூங்காவில் உள்ள 5 நெசவாளர்கள் ஒருங்கிணைந்து 35 அடி நீளத்தில் பட்டுத்திரைச்சீலை ஒன்றை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். 
இது குறித்து வடிவமைப்பாளர் எஸ்.குமாரவேல் கூறியது..
சாதாரணமாக கைத்தறியில் ஒரு பட்டுச்சேலை நெய்து முடிக்க குறைந்த பட்சம் 15 நாள்களாவது ஆகும். தற்போது பட்டுப்பூங்காவின் செயல் இயக்குநர் வி.ராமநாதன் ஆலோசனை மற்றும் அறிவுரையின்படி 24 அடி அகலம்,35 அடி நீளத்தில் கடந்த 45 நாள்களாக பட்டுத்துணியில் ஒரு திரைச்சீலையை தயாரித்து வருகிறோம்.
இச்சேலையை கடந்த செப்டம்பர் மாதம் 22- ஆம் தேதி நெய்யத் தொடங்கி இன்னும் ஒரு சில நாள்களில் திரைச்சீலை நெய்யும் பணி நிறைவு பெறவுள்ளது. பல வண்ணங்களில் வடநாட்டில் உள்ள ஒரு கோயில் ஒன்றின் ராஜகோபுரம் ஒரே படமாக 35 அடி நீளச் சேலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம்.
இத்திரைச் சீலையை செய்ய இதுவரை ரூ.28லட்சம் வரை செலவாகி இருக்கிறது. மூத்த நெசவாளர் எஸ்.லவக்குமார், கைத்தறி தொழில் நுட்பக் கலைஞர்கள் எஸ்.சீனிவாசன்,பி.கங்காதரன் உள்ளிட்ட 5 பேர் ஒருங்கிணைந்து இச்சேலையை வடிவமைத்துள்ளனர். 
இத்திரைச்சீலைக்கென்றே நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தயாராகி வருகிறது. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இத்திரைச் சீலை பெரும் வணிக வளாகங்கள்,கண்காட்சிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் பார்த்து வியக்கும்படி தயாரித்து வருவதாகவும் எஸ்.குமாரவேல் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com