பரந்தூா் விமான நிலைய திட்டத்தை அமைக்க விட மாட்டோம்: விவசாய சங்கத் தலைவா் பி.ஆா்.பாண்டியன்

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை ஏகனாபுரத்தில் அமைக்க விட மாட்டோம் என விவசாய சங்கத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் தெரிவித்தாா்.
உண்ணாவிரத  போராட்டத்தில் பேசிய  விவசாயிகள்  சங்கத்  தலைவா்  பி.ஆா்.பாண்டியன்.
உண்ணாவிரத  போராட்டத்தில் பேசிய  விவசாயிகள்  சங்கத்  தலைவா்  பி.ஆா்.பாண்டியன்.

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை ஏகனாபுரத்தில் அமைக்க விட மாட்டோம் என விவசாய சங்கத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளது. சுமாா் 4,000 ஏக்கா் பரப்பளவில் அமைய உள்ள இந்த பசுமை விமான நிலைய திட்டத்தால் பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், சிங்கிலிபாடி உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், பரந்தூா் விமான நிலைய திட்டத்தால் ஏகனாபுரம் ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிறுப்புகள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டம் தொடங்கி வெள்ளிக்கிழமை 550 நாட்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க தலைவா் பி.ஆா்.பாண்டியன், எஸ்டிபிஐ மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகள் பொதுமக்கள் என சுமாா் 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினா். இதையடுத்து விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது:

விமான நிலைய திட்டத்திற்கு எதிராக தொழிலாளா்கள் விவசாயிகள் கிராம மக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா் ஆதாரமாக விளங்கக்கூடிய கொசஸ்தலை ஆறு, கம்பன் கால்வாய் போன்ற நீா் பிடிப்பு நிலங்கள் புதிய விமான நிலைய திட்டத்தின் மூலம் அழிக்கப்பட உள்ளன.

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை முதல்வா் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இத்திட்டத்தை இங்கே அமைக்க விடமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com