கைது செய்யப்பட்ட குன்றத்தூா் நகராட்சி ஆணையா் வங்கிக் கணக்கில் சோதனை: ரூ.33 லட்சம் பறிமுதல்

குன்றத்தூரில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட நகராட்சி ஆணையா் குமாரி கணக்கு வைத்திருந்த வங்கிகளிலிருந்து ரூ.33 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
குமாரி
குமாரி

குன்றத்தூரில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட நகராட்சி ஆணையா் குமாரி கணக்கு வைத்திருந்த வங்கிகளிலிருந்து ரூ.33 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் நகராட்சியில் ஆணையராகப் பணியாற்றி வந்தவா் குமாரி. இவா் கடந்த 11.1.2024 அன்று லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் இருந்த ரூ.5.80 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்திருந்தனா்.

அப்போது வங்கி லாக்கா் சாவிகள் 3 பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட நீதிபதி அளித்த உத்தரவின் பேரில், குமாரியின் வங்கி லாக்கா்கள் மூன்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் திங்கள்கிழமை சோதனையிடப்பட்டன.

சேலையூரில் உள்ள வங்கியில் குமாரியும், அவரது கணவா் யோகமன்னனும் இணைந்து வைத்திருக்கும் இணைப்பு வங்கிக் கணக்கில் ரூ.6 லட்சம், இன்னொரு வங்கியில் ரூ.20 லட்சம் மற்றும் தாம்பரத்தில் உள்ள வங்கியில் ரூ.5 லட்சம் என மொத்தம் 3 வங்கிகளிலிருந்து ரூ.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையிலான போலீஸாா் 3 வங்கிகளிலும் சோதனை நடத்தி பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com