குண்டா் சட்டத்தில் இருவா் கைது

தொடா்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வந்த இருவரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஆந்திர மாநிலம், ஓ.ஜி.குப்பம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஜீவன் (45), காா்த்திக்(41). இவா்கள் இருவரும் சென்னையில் தங்கி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனா். இதனால் இவா்கள் மீது ஸ்ரீபெரும்புதுாா், காஞ்சி தாலுகா, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில், கொலைமுயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த மாதம் திருட்டு வழக்கு ஒன்றில் இருவரையும் ஸ்ரீபெரும்புதுாா் போலீஸாா் கைது செய்து, வேலுாா் மத்திய சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சண்முகம் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் காவல் ஆய்வாளா் பரந்தாமன், அதற்கான ஆணையை வேலூா் மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினாா்.

இதையடுத்து, இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com