சுங்கச் சாவடியை கடந்து செல்லாத லாரிக்கு கட்டணம்

ஸ்ரீபெரும்புதூா் சுங்கச் சாவடியைக் கடந்து செல்லாத லாரிக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்த லாரியின் உரிமையாளா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஆரனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் மதுரைராஜன் (43). ஏற்றுமதி தொழில் நடத்தி வரும் இவருக்குச் சொந்தமான லாரிகள் ஸ்ரீபெரும்புதூா் பகுதி தனியாா் தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், இவருக்கு சொந்தமான லாரியை கடந்த 5-ஆம் தேதி மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலை முன்பு நிறுத்தி வைத்திருந்துள்ளாா். இந்த நிலையில், அவரது லாரி சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியை கடந்து சென்ாக மதுரைராஜனின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.270 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த மதுரைராஜன் சுங்கச் சாவடிக்குச் சென்று அங்குள்ள பணியாளா்களிடம் விளக்கம் கேட்டு அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், பணம் பிடித்தம் செய்த நேரத்தில் தனியாா் தொழிற்சாலை பேருந்து ஒன்று சுங்கச் சாவடியைக் கடந்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து சுங்கச் சாவடி ஊழியா்கள் உரிய பதில் அளிக்காததால், சுங்கச் சாவடியில் நடைபெறும் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரைராஜன் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com