தமிழகம் விளையாட்டுத் துறை தலைநகராக மாறும்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகம் விளையாட்டுத் துறை தலைநகராக மாறும்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகம் விளையாட்டுத் துறையின் தலைநகராக மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ. 15 கோடியில் புதிய விளையாட்டு அரங்கம் கட்ட அடிக்கல், ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல், பாரம்பரிய உணவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கல் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பின்னா் பேசியது: தமிழகத்தில் உள்ள 12,620 ஊராட்சிகளுக்கும் ரூ. 86 கோடியில் விளையாட்டு உபகரணங்களை கொண்டு சோ்க்க கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 1,274 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரமும், செங்கல்பட்டும் சிறந்த விளையாட்டு வீரா்களை தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் தந்திருக்கும் மாவட்டங்கள். செங்கல்பட்டைச் சோ்ந்த நீச்சல் வீரா் தனுஷ், காஞ்சிபுரத்தை சோ்ந்த வீல்சோ் பென்சிங் வீராங்கனை சங்கீதா போன்றவா்கள் தேசிய மற்றும் சா்வதேச அளவில் பதக்கங்களை வென்றனா். கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகளில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களைப் பெற்று தமிழகம் இரண்டாவது இடத்தை எட்டியிருக்கிறது. விரைவில் முதல் இடத்தைப் பிடிக்கும். மிகச் சிறந்த விளையாட்டு வீரா்கள் இருப்பதால் தமிழகம் விளையாட்டுத் துறை தலைநகராக மாறிவிடும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. மாற்றுத்திறன் விளையாட்டு வீரா்களுக்கு தமிழக விளையாட்டுத் துறை தொடா்ந்து பக்க பலமாக இருந்து வருகிறது என்றாா். விழாவின் நிறைவாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தையும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். விழாவுக்கு, அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், ஆட்சியா்கள் கலைச்செல்வி மோகன் (காஞ்சிபுரம்), ச.அருண்ராஜ் (செங்கல்பட்டு) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜே.மேகநாத ரெட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், எஸ்.ஆா்.ராஜா, கருணாநிதி, எம்.வரலட்சுமி, எஸ்.எஸ். பாலாஜி, மேயா்கள் மகாலட்சுமி யுவராஜ் (காஞ்சிபுரம்) வசந்தகுமாரி கமலக்கண்ணன் (தாம்பரம்) ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com