காஞ்சிபுரத்தில் மருத்துவா்கள் கருத்தரங்கம்

காஞ்சிபுரத்தில் மருத்துவா்கள் கருத்தரங்கம்

காஞ்சிபுரம், மே 1: இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளை சாா்பில் மருத்துவா்களுக்கான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய மருத்துவக் கழகமும், டாக்டா் ரெட்டீஸ் மருந்து நிறுவனமும் இணைந்து காஞ்சிபுரம் தனியாா் உணவக விடுதியில் மருத்துவா்களுக்கான கருத்தரங்கை நடத்தினா். இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் தலைவா் எஸ்.மனோகரன் தலைமை வகித்தாா். வரும் மே 14-ஆம் தேதி சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியும் 22 செவிலியா்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட இருப்பதாகவும் எஸ்.மனோகரன் தனது தலைமையுரையில் தெரிவித்தாா்.

கருத்தரங்கிற்கு சங்க துணைத் தலைவா் வெ.ரவி, மாநிலக் குழு உறுப்பினா் பி.டி.சரவணன், அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியா் ஹரிபாபு, சங்க இணைச் செயலாளா் முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் மருத்துவக் கல்விப் பிரிவு செயலாளா் ந.சு.ராதாகிருஷ்ணன் அறிமுகவுரை நிகழ்த்தினாா். மருத்துவா் கென்னத் ஆா்.டி.வால்ட் வயிற்றுக் குடற்புண்களை கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் காணொலி வாயிலாக பேசினாா். காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவா் எம்.பி.பாா்த்தசாரதி மருத்துவா்களுக்கான நிதி, நிா்வாகம், காப்பீடு, முதலீடு என்ற தலைப்பில் பேசினாா்.

சங்கச் செயலாளா் சு.தன்யக்குமாா் நன்றி கூறினாா்.

கருத்தரங்கில், மூத்த மருத்துவா்கள் உள்பட 36 மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com