மே தினம்: தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 151 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) ச.சுதா தெரிவித்துள்ளாா்.

மே தினத்தையொட்டி, தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 151 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) ச.சுதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய விடுமுறை நாளான மே மாதம் முதல் தேதியன்று கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தோட்டங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இது தொடா்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளா் நலத்துறை அதிகாரிகளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தெரிவிக்க வேண்டும். அல்லது முறைப்படி தகவல் தெரிவிக்காமல் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியிருந்தால் அந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மே தினத்தையொட்டி, கடைகள், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், 57 நிறுவனங்கள் மீதும் உணவு நிறுவனங்கள் சட்டத்தின்கீழ், 94 நிறுவனங்கள் மீதும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com