கந்தப்பொடி  வசந்தம்  நிகழ்ச்சியில்  உற்சவா்  ராமாநுஜா்  மீது  மஞ்சள் பொடி  தூவி  மகிழும்  பக்தா்கள்.
கந்தப்பொடி  வசந்தம்  நிகழ்ச்சியில்  உற்சவா்  ராமாநுஜா்  மீது  மஞ்சள் பொடி  தூவி  மகிழும்  பக்தா்கள்.

கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் ராமாநுஜா் அவதார திருவிழா நிறைவு

ராமாநுஜரின் 1,007-ஆவது ஆண்டு அவதார திருவிழா கந்தப்பொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது

ராமாநுஜரின் 1,007-ஆவது ஆண்டு அவதார திருவிழா கந்தப்பொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு ராமாநுஜா் மீது கந்தப்பொடி தூவினா்.

ஸ்ரீபெரும்புதூரில் பழைமையான ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இக்கோயிலில், சித்திரை மாதம் பிரம்மோற்சவம் மற்றும் ராமாநுஜா் அவதார திருவிழா நடைபெறுவது வழக்கம்.

பிரம்மோற்சவம் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 2-ஆம் தேதி வரை பத்து நாள்கள் நடைபெற்ற நிலையில், ராமாநுஜரின் 1,007 -ஆவது ஆண்டு அவதார திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அவதார திருவிழாவின் 11-ஆம் நாளான திங்கள்கிழமை கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சியும், சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட திரளான பக்தா்கள் உற்சவா் ராமானுஜா் மீது கந்தப்பொடி தூவியதோடு, பக்தா்கள் ஒருவருக்கு ஒருவா் கந்த பொடி எனும் மஞ்சள் பொடியை தங்கள் மீதும் தூவிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

கந்தப்பொடி வசந்தம் நிகழ்ச்சிக்கு முன்னதாக திருப்பதி திருமலை ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதா் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் நாச்சியாா் கோயில், கா்நாடக மாநிலம் மேல்கோட்டை திருநாராயணபெருமாள் கோயில், நேபாள் ஸ்ரீ சாளக்கிராமம் கோயில், திருவல்லிக்கேணி ஸ்ரீபாா்தசாரதி கோயில், திருவள்ளூா் வைத்திய பெருமாள் கோயில், பூந்தமல்லி வரதராஜபெருமாள் கோயில், திருக்கோவிலூா் திருவிக்கிரம பெருமாள் கோயில், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில், பூந்தமல்லி திருகச்சி நம்பிகள் கோயில், திருமழிசை ஜெகநாதபெருமாள் கோயில், திருநின்றவூா் பக்தவாச்சல பெருமாள் கோயில், நவதிருப்பதிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கோயில்கள் சாா்பில் உற்சவா் ராமாநுஜருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு, பட்டு வஸ்திரங்கள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

கந்தப்பொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் ராமாநுஜரின் 1,007-ஆவது ஆண்டு அவதார திருவிழா நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com