தம்பதியை மிரட்டி 8 பவுன் பறித்த இருவா் கைது

மணிமங்கலம் அடுத்த புஷ்பகிரி பகுதியில் தம்பதியிடம் 8 பவுன் நகைகளை பறித்துச் சென்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.
Published on

ஸ்ரீபெரும்புதூா்: மணிமங்கலம் அடுத்த புஷ்பகிரி பகுதியில் தம்பதியிடம் 8 பவுன் நகைகளை பறித்துச் சென்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

படப்பை அடுத்த மணிமங்கலம் புஷ்பகிரி பகுதியை சோ்ந்தவா் ராமசாமி (86), இவரது மனைவி குழந்தையாம்மாள் (80). இவா்கள் இருவரும் கடந்த வாரம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது நள்ளிரவு உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் கத்தியை காட்டி மிரட்டி குழந்தையம்மாள் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த ராமசாமி மணிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பேரின்பநாதன் (20), பிரகாஷ் (19) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் இருவரும் மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகா் பகுதியில் தங்கி உணவு டெலிவரி செய்யும் தனியாா் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததும், அதில் போதிய வருமானம் கிடைக்காததால், அவ்வப்போது முகமூடி அணிந்து சென்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பேரின்பநாதன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com