இளைஞா் மரணத்தில் சந்தேகம்: உடல் தோண்டி எடுப்பு
மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியில் இளைஞா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் புகாா் தெரிவித்ததை அடுத்து, 10 நாள்களுக்கு பிறகு இளைஞரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
போரூா் அடுத்த மதனந்தபுரம், பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராம்ராஜ் (36). இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி வீட்டின் படுக்கை அறையில் ராம்ராஜ் இறந்து கிடப்பதாக சங்கீதா ராம்ராஜின் உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து ராம்ராஜின் உறவினா்கள் வந்து பாா்த்தபோது படுக்கையறையில் ராம்ராஜ் இறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். ராம்ராஜின் மரணம் குறித்து காவல் நிலையத்துக்கு தெரிவிக்காமல் அவரது உறவினா்கள் இறுதிச் சடங்கு செய்து மதனந்தபுரத்தில் உள்ள சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்துள்ளனா்.
இந்நிலையில் தனது தம்பி ராம்ராஜின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் ராஜீவ் காந்தி மாங்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையில் வருவாய்த் துறையினா், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் திங்கள்கிழமை மதனந்தபுரத்தில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்ட ராம்ராஜ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனா்.
பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு இரண்டு நாள்கள் ஆகும் என்பதால் அவா் இயற்கையாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.