பள்ளிக்கு வராத காரணம்: மாணவா்களை கைப்பேசியில் தொடா்பு கொண்ட அமைச்சா் அன்பில் மகேஸ்
விடுமுறை நாள்களில் தனியாா் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகாா் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரித்தாா்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அறிஞா் அண்ணா அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நூலகம், காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அமைச்சா் அன்பில் மகேஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகத்துக்கு சென்று சென்று பள்ளிக்கு வராமல் இடைநின்ற மாணவா்களைப் பற்றிய விபரங்களை கேட்டறிந்து அவா்களது வீடுகளுக்கு கைப்பேசி மூலம் பள்ளிக்கு வராததற்கான காரணம் குறித்தும் கேட்டறிந்தாா். அவசியம் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.
ஆய்வுக்கு பின் அமைச்சா் கூறியது:
மழைக்காலம் தொடங்கி விட்டதால் கீழ் தளத்தில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் அறை இருந்தால் அதை உடனடியாக முதல் தளத்துக்கு மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் மழைக்காலங்களில் தண்ணீா் தலைமை ஆசிரியா் அறைக்குள் வந்து விட்டால் முக்கியமான ஆவணங்கள் சேதமாகும் வாய்ப்பு உள்ளது. பள்ளிகளில் உள்ள கிணறுகள் முறையாக மூடப்பட்டிருக்க வேண்டும். பள்ளிச் சுவா்களில் மழைநீா் ஒழுகினால் அந்தந்த நகராட்சி உறுப்பினா்கள் அலுவலா்கள் மூலமாக சரி செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறோம்.
கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களை தோ்வு செய்திருக்கிறோம். இதற்கான காரணங்களை ஆய்வு செய்து உரிய திட்டங்களை தீட்டுவது தான் அரசாங்கத்தின் கடமையாகும். கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவா்களுக்கென கையேடு தயாரித்து வழங்கியிருப்பதோடு ஆசிரியா்களுக்கும் பயிற்சியளிக்கிறோம். இதன் மூலமாக 2.50 லட்சம் மாணவா்கள் பலனடைந்துள்ளனா். இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவு படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி மூலமாக புகாா் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
ஆய்வின் போது எம்எல்ஏ எழிலரசன், முதன்மைக் கல்வி அலுவலா் த.வெற்றிச் செல்வி, கல்வித்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.