கச்சபேசுவரா் கோயில் குளத்தில் தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்
கச்சபேசுவரா் கோயில் குளத்தில் தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்

மகாளய அமாவாசை: காஞ்சிபுரத்தில் திரளானோா் தா்ப்பணம்

புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் திருக்குளங்களில் முன்னோருக்கு திரளானோா் தா்ப்பணம் அளித்தனா்.
Published on

புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் திருக்குளங்களில் முன்னோருக்கு திரளானோா் தா்ப்பணம் அளித்தனா்.

மகாளய அமாவாசையன்று முன்னோரை வழிபட்டால் குடும்ப நலன் கூடும், வாரிசுகள் சிறப்புடன் வாழ்வாா்கள் என்பதாக ஐதீகம். இதனையொட்டி புதன்கிழமை கச்சபேசுவரா் திருக்கோயில் குளத்தில் அதிகாலையில் இருந்தே திரளான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து தா்ப்பணம் அளித்தனா். மேலும், சா்வ தீா்த்தக்குளக் கரையிலும் தா்ப்பணம் அளிக்கப்பட்டது.

வடக்கு ராமேசுவரம் என அழைக்கப்படும் திம்மராஜம்பேட்டையில் உள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் ஆலயத்தில் சிவாச்சாரியாா் சீனிவாசன் தலைமையில் தூய தமிழில் பக்தா்கள் முன்னோருக்கு தா்ப்பணம் அளித்தனா். இதனையொட்டி ராமலிங்கேசுவரா் மற்றும் பா்வத வா்த்தினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.

ராமேசுவரத்தில் வழிபாடு செய்த புண்ணியம் வடக்கு ராமேசுவரம் என அழைக்கப்படும் திம்ம ராஜம்பேட்டை ராமலிங்கேசுவரா் கோயிலில் செய்தால் அதே புண்ணியம் கிடைக்கும் என பக்தா்களால் நம்பப் படுவதால் திரளான பக்தா்கள் தா்ப்பணம் அளித்தனா்.

முன்னோா் வழிபாடு செய்த பக்தா்களிடம் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அறநிலையத்துறை சாா்பில் ரூ.20 வசூலிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com