வீட்டிலிருந்த 12 பவுன் மாயம்
குன்றத்தூரில் கட்டட மேஸ்திரி வீட்டிலிருந்த 12 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குன்றத்தூா் பாலவராயன் குளக்கரை தெரு காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (38), கட்டட வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், திருவண்ணாமலைப் பகுதியில் வசித்து வந்த பிரகாஷின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், இறுதிச் சடங்கில் பங்கேற்ற மனைவி சரஸ்வதியுடன் திருவண்ணாமலைக்குச் சென்ற பிரகாஷ் கடந்த சில நாள்களுக்கு முன்பு குன்றத்தூா் திரும்பியுள்ளாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரகாஷின் உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வீட்டில் வைத்திருந்த நகை பையைத் திறந்து பாா்த்தபோது, அதில் வைத்திருந்த 12 பவுன் நகைகள் மற்றும் 300 கிராம் வெள்ளிப் பொருள்கள் காணாமல் போனதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
இது குறித்து குன்றத்தூா் காவல் நிலையத்தில் பிரகாஷ் புகாா் அளித்தாா். அதன் பேரில், குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.