காஞ்சிபுரம்: மழைநீா் வடிகால்களில் கழிவுகள் அகற்றம்
வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் மழைநீா் வடிகால்வாயில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணியினை நெடுஞ்சாலைத்துறையினா் மேற்கொண்டுள்ளனா்.
பருவமழையின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையினா் சாலைகளில் மழைநீா் தேங்கி நிற்காமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இதனடிப்படையில் காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் முரளீதரன் அறிவுறுத்தலின் பேரில் 10 போ் கொண்ட குழுவினா் மழைநீா் வரத்துக் கால்வாய்களில் நீா் எந்த இடத்திலும் தேங்கி நிற்காதவாறு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
காஞ்சிபுரம் காந்தி சாலை, திருக்கச்சி நம்பிகள் தெருவில் பணி தொடங்கப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டன. காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலை, காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலை, காஞ்சிபுரம்-வந்தவாசி மற்றும் வேலூா் சாலை பகுதிகளிலும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.