வாகன சோதனை: ரூ.6.48 லட்சம் அபராதம்
காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் சனிக்கிழமை அதிகாரிகள் கூட்டாக நடத்திய வாகன சோதனையில் அரசு விதிகளை மீறியதாக 10 கனரக லாரிகளுக்கு ரூ.6.48 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வாலாஜாபாத்தின் சுற்றுப்புற பகுதிகளில் செங்கல்,கருங்கல் ஜல்லி,எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை அதிக பாரத்துடன் ஏற்றிச் செல்வதாக அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன.
இதனைத் தொடா்ந்து வாலாஜாபாத் வட்டாட்சியா் கருணாகரன் மற்றும் வருவாய்த் துறை,காவல் துறை, வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இணைந்து கூட்டாக வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அதிக பாரமும், அதிக வேகத்துடனும் சென்ற கனரக லாரிகள், தாா்ப்பாய் இல்லாமல் சென்ற லாரிகள் ஆகியவற்றை நிறுத்தி சோதனையிட்டு அவற்றை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்தனா்.
காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் வாகனங்களின் ஆவணங்களை சரிபாா்த்து 10 கனரக லாரிகளின் உரிமையாளா்களுக்கும் மொத்தம் ரூ.6.48 லட்சம் அபராதம் விதித்தாா்.