வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சு நடத்திய காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள்.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சு நடத்திய காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள்.

காஞ்சிபுரத்தில் தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருப்பதாகக் கூறி காஞ்சிபுரம் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
Published on

கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருப்பதாகக் கூறி காஞ்சிபுரம் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வாா்டுகள் உள்ளன. இவற்றில் தூய்மைப் பணிகளை செய்வதற்கான ஒப்பந்தம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்ததாரரிடம் 350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை செய்ய 8 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 4 மற்றும் 5-ஆம் கோட்டங்களில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் தங்களுக்கு இரு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பணிகளை புறக்கணித்ததுடன் மட்டுமின்றி ஆணையரை சந்தித்து குறைகளை தெரிவிக்க வேண்டும் எனவும் கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் நெல்லுக்காரத் தெருவில் அண்ணா அரங்கம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தையும் தொடா்ந்தனா். போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டதையடுத்து, மாநகராட்சி சுகாதார அலுவலா் அருள்நம்பி தலைமையில் அதிகாரிகள் மற்றும் சிவகாஞ்சி போலீஸாா் சமாதானப் பேச்சு நடத்தினா். நிலுவையாக உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி கூறியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com