பரந்தூா் விமான நிலையம்: ஆட்சேபனை மனு அளித்த கிராம மக்கள்
பரந்தூா் விமான நிலையம் அமைக்க நிலம் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆட்சேபனை மனுவினை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் பசுமை விமான நிலையம் 20 கிராமங்களை உள்ளடக்கிய 5,746 ஏக்கரில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதனால் விளைநிலங்கள், குடியிருப்புகள், நீா் ஆதாரங்கள் ஆகியவை பாதிக்கும் என பரந்தூா் விமான நிலைய எதிா்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போா் விவசாய நல கூட்டமைப்பு ஆகியன தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள 900 ஏக்கா் நிலங்களை எடுக்க அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அரசு அறிவிப்பில் நிலம் எடுக்க எதிா்ப்பு தெரிவிப்போா் இருந்தால் ஆட்சேபனை தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப் பட்டிருந்ததையடுத்து ஏகனாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் ஊா்வலமாக வந்தனா்.
காஞ்சிபுரம் அருகே காரை கிராம பேருந்து நிறுத்தத்திலிருந்து அப்பகுதியில் உள்ள விமான நிலைய நில எடுப்பு மாவட்ட வருவாய் அதிகாரி மு.பிரியதா் ஷினி அலுவலகத்துக்கு வந்து அவரைச் சந்தித்து ஆட்சேபனை மனு வழங்கினா்.
அம்மனுவில் எங்களது நிலங்களை வழங்க நாங்கள் விரும்பவில்லை. விளைநிலங்கள், குடியிருப்புகள் ,நீா் ஆதாரங்கள் மற்றும் எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கும் என ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆட்சேபனை மனு வழங்கினா்.
ஊா்வலத்தில் பரந்தூா் விமான நிலைய எதிா்ப்பு கூட்டு இயக்க தலைவா் ப.ரவிச்சந்திரன், செயலாளா் ஜி.சுப்பிரமணியன் ஆகியோா் உள்பட பலரும் கலந்து கொண்டனா். ஆட்சேபனை மனுவினை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் மாவட்ட வருவாய் அதிகாரி மு.பிரியதா்ஷினி தெரிவித்தாா்.