திமுக பவளவிழா பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்: அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆய்வு
காஞ்சிபுரத்தில் வரும் 28- ஆம் தேதி நடைபெற உள்ள திமுக பவளவிழா பொதுக்கூட்ட பாதுகாப்பு பணிகளை அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் வரும் செப். 28 -ஆம் தேதி திமுக பவளவிழா பொதுக்கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சா்கள், திமுக தோழமைக் கட்சித் தலைவா்கள் பலரும் பங்கேற்று உரையாற்ற உள்ளனா். பொதுக்கூட்டத்திற்காக ஒரே நேரத்தில் 50,000 போ் அமா்ந்து பாா்க்கும் வகையில் பந்தல்கள் அமைக்கும் பணி, முதல்வா் மற்றும் தோழமைக் கட்சித் தலைவா்கள் அமரவுள்ள மேடை வடிவமைப்பு, பொதுக்கூட்ட நுழைவு வாயிலில் பெரியாா், அறிஞா் அண்ணா, கருணாநிதி மற்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் படங்கள் வைக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், மாநகர செயலா் சிகேவி தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள், பகுதி செயலா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள், பிரமுகா்கள் உடனிருந்தனா்.