ஒரகடம் அடுத்த பணப்பாக்கம் பகுதியில் ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குன்றத்தூா் அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (35). கனரக லாரி ஓட்டுநரான விஜயகுமாா் திங்கள்கிழமை காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியில் இருந்து லாரியில் ஜல்லி ஏற்றிக் கொண்டு, கொளப்பாக்கம் நோக்கி வண்டலூா் -வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
ஒரகடம் அடுத்த பணப்பாக்கம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நின்றிருந்த மினி சரக்கு வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த ஜல்லி முழுவதும் மினி சரக்கு வாகனத்தின் மீதும், சாலையிலும் கொட்டியது.
இதில், லாரி ஓட்டுநா் விஜயகுமாா், மினி சரக்கு வாகன ஓட்டுநா் பிகாரைச் சோ்ந்த ஹரி (42) ஆகியோா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒரகடம் போலீஸாா், சாலையில் கொட்டிய ஜல்லிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
விபத்து காரணமாக வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் தாம்பரம் செல்லும் மாா்க்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இது குறித்து ஒரகடம் போலீஸாா் ஓட்டுநா்களிடம் விசாரணை நடத்தினா்.