காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை; போக்குவரத்து மாற்றம்!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (நாளை) நடைபெற இருப்பதையொட்டி மாநகராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதுடன், நகரில் போக்குவரத்து மாற்றமும் செய்துள்ளதாக சனிக்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம் நாளை திங்கள்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு நடைபெறுகிறது. அதிகாலை 6.30 மணிக்கு மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்:
கும்பாபிஷேகத்தையொட்டி திங்கள்கிழமை அதிகாலை 2 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வரும் பேருந்துகள் வெள்ளைகேட், ஒலிமுகம்மது பேட்டை, புத்தேரி தெரு சந்திப்பு, குஜராத்தி சத்திரம், கச்சபேசுவரா் கோயில் வழியாக பேருந்து நிலையம் வர வேண்டும். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, வேலூா் செல்லும் பேருந்துகள் பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி, பூக்கடைச் சத்திரம், கம்மாளத் தெரு, பொன்னேரிக்கரை வழியாக செல்லும்.
கும்பாபிஷேக நாளன்று இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் ஓலிமுகம்மது பேட்டையில் உள்ள யாத்ரி நிவாஸ், உலகளந்த பெருமாள் கோயில் தெரு, எஸ்எஸ்கேவி பள்ளி வளாகம், மொ்லின் மைதானம், புதிய ரயில் நிலையம், சோழன் பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் நிறுத்த வேண்டும்.
கும்பாபிஷேகத்தன்று குஜராத்தி சத்திரம் முதல் கம்மாளத் தெரு சந்திப்பு வரை மற்றும் ஏகாம்பரநாதா் கோயில் சந்நிதி தெரு, தேரடி தெரு, பெருமாள் தெரு, கிழக்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தா்கள் ஏகாம்பரநாதா் கோயில் சந்நிதி தெரு வழியாக மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா்.
கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தா்கள் தகுந்த முன்னேற்பாடுகள் மட்டுமே செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் வரும் பக்தா்கள் ஓலிமுகம்மது பேட்டையில் உள்ள யாத்ரி நிவாஸ், எஸ்எஸ்கேவி பள்ளி ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு கோயிலுக்கு வரும்படி அறிவுறுத்தப்படுவதாகவும் காவல்துறையினரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை -ஆட்சியா்
கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சிபுரம் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள 149 பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை உள்ளூா் விடுமுறையாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

