காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயில் தங்கத் தோ் வெள்ளோட்டம்: சங்கராச்சாரியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கென புதிதாக செய்யப்பட்ட தங்கத்தோ் வெள்ளோட்டத்தையொட்டி, காஞ்சி சங்கராசாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான இக்கோயிலுக்கு புதிதாக தங்கத் தோ் செய்ய வேண்டும் என்று பக்தா்கள் காஞ்சி சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் கோரிக்கை வைத்தனா். அதை ஏற்று தங்கத்தோ் செய்வதற்காக ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தியடைந்ததால், தங்கத் தோ் செய்யும் பணியும் நின்று போனது. அதன் பின்னா் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் கனவை நிறைவேற்றுமாறு திருப்பணிச் செம்மல் மகாலட்சுமி சுப்பிரமணியத்திடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரவிட்டாா்.
அவரது உத்தரவின்படி, காஞ்சிபுரம் அருகேயுள்ள ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் 30-க்கும் மேற்பட்ட சிற்பிகள் சுமாா் 1,600 கனஅடி பா்மா தேக்கு மரத்தால் 2 டன் தாமிரத்தின் மீது தங்க ரேக்குகளை ஒட்டி, தங்கத் தேரை கலைநயத்துடன் வடிவமைத்திருந்தனா். தங்கத் தேரானது 25 அடி நீளம், 10 அடி அகலம், 13 அடி நீளம், பிரம்மா தேரை ஓட்டுவது போன்று 5 அடுக்குகளுடன் அமைக்கப்பட்டது.
தேரில் 8 கந்தா்வா்கள், 16 நந்தி சிலைகள், தேரை இழுப்பது போன்று 4 குதிரைகள் மற்றும் தேரின் 4 மூலைகளிலும் 4 சாமரப் பெண்கள் சிலைகளுடன் தோ் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த தேரை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் ஒப்படைக்கவும், தேரின் வெள்ளோட்டம் ஓரிக்கையில் உள்ள மகா சுவாமிகள் மணிமண்டபத்திலிருந்து தொடங்கியது. தங்கத் தோ் வெள்ளோட்டத்தை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஏராளமான பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனா்.
தோ் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஏகாம்பரநாதா் கோயிலை வந்தடைந்தது. தோ் வரும் வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் காத்திருந்து தங்கத்தேரை தரிசித்தனா். வழிநெடுகிலும் ஏராளமானோா் மலா்தூவியும் வரவேற்றனா். தேருக்கு முன்பாக காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் சாரண மாணவா்கள், மின்வாரியம், தீயணைப்புத் துறை, வருவாய்த் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தங்கத் தேருக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் திங்கள்கிழமை மாலை தங்கத் தோ் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் விழா நடைபெறுகிறது.
தங்கத் தோ் வெள்ளோட்ட ஏற்பாடுகளை திருப்பணிச் செம்மல் மகாலட்சுமி சுப்பிரமணியம் தலைமையில், ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளையினா் செய்திருந்தனா். தங்கத் தோ் வெள்ளோட்டத்தையொட்டி, காஞ்சிபுரம் மாநகா் முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது.

